கோவிட் பெருந்தொற்று காலத்தில் பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு, வழக்கமான ஓய்வூதிய பட்டுவாடா உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, “தற்காலிக” ஓய்வூதியம் வழங்கப்படும் : டாக்டர் ஜிதேந்திர சிங்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு, வழக்கமான ஓய்வூதியப் பட்டுவாடா உத்தரவு மற்றும் இதர அலுவலக நடைமுறைகள் முடிவடையும் வரை, “தற்காலிக” ஓய்வூதியம் வழங்கப்படும்.
மத்தியில் பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் தினத்தன்றே, அவர்களுக்கான ஓய்வூதியப் பட்டுவாடா ஆணையை சம்பந்தப்பட்ட பணியாளருக்கு தாமதமின்றி வழங்குவதற்கு ஏதுவாக, ஓய்வூதியங்கள் துறை மேம்படுத்தப்பட்டிருப்பதாக, பிரதமர் அலுவலகம் மற்றும் மத்தியப் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.
எனினும், கோவிட் பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக, அலுவலகப் பணிகள் தடைபட்டிருப்பதாகக் கூறியுள்ள டாக்டர். ஜிதேந்திர சிங், பெருந்தொற்று காலத்தில் ஓய்வுபெறும் சில ஊழியர்களுக்கு ஓய்வூதிய பட்டுவாடா ஆணையை வழங்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் மீது தற்போதைய அரசு கொண்டுள்ள அக்கறைக்கு ஆதாரமாக, மத்திய அரசுப் பணியாளர் (ஓய்வூதிய விதி)1972இன்படி வழக்கமான ஓய்வூதியம் வழங்குவதற்கான நடைமுறைகளைத் தொடங்குவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கும் வகையில், வழக்கமான ஓய்வூதியப் பட்டுவாடா ஆணை பிறப்பிக்கப்படும் வரை, “தற்காலிக ஓய்வூதியம்” மற்றும் “தற்காலிகப் பணிக்கொடை” போன்றவற்றைத் தடையின்றி வழங்குவதற்கேற்ப விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளது.
மத்தியப் பணியாளர் நல அமைச்சகத்திற்குட்பட்ட ஓய்வூதியத் துறை வெளியிட்டுள்ள அலுவலக ஆணையின்படி, முதலில், ஓய்வுபெறும் நாளிலிருந்து 6 மாதங்கள் வரையிலோ அல்லது தவிர்க்க முடியாத பட்சத்தில், ஓராண்டு வரையிலோ “தற்காலிக ஓய்வூதியம்” வழங்கப்படும். பணிநிறைவு ஓய்வு மட்டுமின்றி, விருப்ப ஓய்வு மற்றும் அடிப்படை விதி 56-இன் கீழ் ஓய்வு பெறுவோருக்கும் இந்த நடைமுறைகள் பொருந்தும்.
பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.